Suriya Rice Shop Blog

பலதலைமுறை பாவங்கள் தீர்க்கும் அதிசயம் அரிசி மாவு.முன்னோர்கள் ரகசியம் என்ன?

 

bowl-of-whole-grain-flour

எந்த தலைமுறையில் செய்த பாவம் என்றாலும் அது விடாமல் நம்மை திரும்ப தாக்கும் என்று எல்லோராலும்  நம்பப்படுகிறது. அப்படி தெரிந்து, தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும் அதிசயம் அரிசி மாவில் இருப்பதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு பிடி கையில் அள்ளி, நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் விநாயகரை மூன்று சுற்று சுற்றி, பச்சரிசி மாவினை விநாயகரை சுற்றி போடவேண்டும். அந்த அரிசி மாவினை எறும்புகள் தூக்கிச்சென்று, மழைக்காலத்தில் சாப்பிடுவதற்காக சேமித்து வைத்துக்கொள்கின்றன.

எறும்பின் எச்சில் பட்டதும் அரிசியின் கெடும் தன்மை நீங்கிவிடும். அரிசியை சாப்பிட எறும்புகள் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்பதால், அது வரை அந்த அரிசி கெடாமல் இருக்கும். இப்படி எறும்புகள் சாப்பிடுவதை முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும் என்பதால் இப்படி அடிக்கடி எறும்புகளுக்கு உணவு அளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மை அண்டாது எனக்கூறப்படுகிறது.

Advertisements

பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்க 3 எளிய வழிகள்.

உண்ணும் உணவே இன்னைக்கு உண்ன்மையானதானு சந்தேகப்படும் அளவுக்கு இன்னைக்கு கலப்பட உணவு வகைகள் பரவி கிடக்கு அதிலும் நாம அன்றாடம் சாப்பிடுற கூட பிளாஸ்டிக் அரசி வந்துட்டதா சமூக ஊடகங்கள பல வீடியோக்கள் பகிரப்படுது. இது மக்கள் மத்தயில பெரிய அச்சத்தை உண்டு பண்ணிருக்கு.

சரி பிளாஸ்டிக் அரிசிய கண்டுபிடிக்கிற 3 எளிய வழிகள இப்ப பாப்போம்.

கண்ணாடி தம்ளரில் தண்ணீர் நிரப்பி அதில் அரிசியை இட்டால் நல்ல அரிசி கீழே தங்கும். பிளாஸ்டிக் என்றால் மிதக்கும்.

பொதுவாக அரிசியை எரித்தால் அது பொரிந்து கருகும் தன்மை கொண்டதாக இருக்கும். பிளாஸ்டிக் என்றால் அது எரிவதோடு, நாற்றமும் வீசும்.

மேலும், சூடான எண்ணெய்யில் அரிசியைப் போட்டால் அது போட்டவுடன் பாத்திரத்தின் அடியில் தங்கும். பிளாஸ்டிக் என்றால் அது பிசின் போல உருகி, கூழ் போல மாறி விடும். எனவே, பொதுமக்கள் இந்த எளிய வழிகளைக் கையாண்டு போலியான அரிசியை தெரிந்துக் கொள்ளலாம்.

அன்னையை ஆராதிப்போம்.மே 14 இன்று அன்னையர் தினம்.

annaiyar thinam

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பு தரும் உள்ளம் அன்னை மட்டுமே இதை மறுக்க யாராலும் முடியாது.

அப்பா அடிக்க வரும்போது அம்மா முந்தானையின் பின் ஓடி ஒளிந்துகொள்ளும் பிள்ளையை வாரி அனைத்து என் பிள்ளையை அடிக்காதீங்க கொஞ்சுகிற தாய் கடவுளின் மறுஅம்சம்.

அம்மாவுக்கு அம்மா என்ற ஒரு ரோல் மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, வேலைக்கு சென்று, குடும்ப பாரத்தை பகிர்ந்து, கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அமைதியாக அன்புடன் சிரித்து நடந்து கொள்ளும் பாங்கு. இத்தனையும் அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.

அந்த அன்னையைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று அன்னையர் தினம்.

இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை குளிர்விக்க, ஆச்சரியப்படுத்த, அன்று ஒரு நாளாவது அவளை அமர வைத்து ஓய்வு கொடுத்து, பரிசுகள் கொடுத்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் வாசித்து, அவளுடன் பொழுதை போக்க நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

“சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒண்ணு நெலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாய் இருக்குதா”

மே 10: சித்ரா பௌர்ணமி வழிபாடு செய்வது எப்படி? அதன் சிறப்பம்சங்கள் என்ன?

How to worship lord chitragupta on chitra pournami
திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும்‘ என்பார்கள். விதியை வெல்லும் ஆற்றல் யோகமான திதிகளில் செய்யும் வழிபாட்டிற்கு உண்டு. அந்த வகையில் திதிகளில் அமாவாசை திதியும், பவுர்ணமி திதியும் மிக முக்கியமான திதிகளாகும். ஒன்று நிலவு நிறைந்த நாள், மற்றொன்று நிலவு மறைந்த நாள். அன்றைய தினம் கடல் அருகில் நீங்கள் சென்று பார்த்தால் கடல் நீர் மேல் நோக்கி அதிகமாக எழுவதைப் பார்க்கலாம். அலை எழும் அன்றைய தினம் நாம் விரதம், வழிபாடுகளை மேற்கொண்டால் அலைபாயும் உள்ளங்களுக்கு அமைதி கிடைக்கும். மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு மட்டும் ‘சித்ரா பவுர்ணமி‘ என்று பெயர் சூட்டுகின்றோம். காரணம் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் முழுமையடைகின்றார்.

திருக்கயிலை மாமலையில் பார்வதி ஒரு சமயம் தோழியருடன் இருந்த போது பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது எல்லோருக்கும். அதன்படி உமையாள், தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள். அந்த சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டவனுக்கு அகமகிழ்வுடன், சித்ரகுப்தன் எனத் திருப்பெயர் சூட்டினாள். அதன்பின் உலகைக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ர குப்தனை அழைத்துச் சென்ற அன்னை நடந்தவற்றை விளக்கினாள். சித்ர குப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்து வாழ்த்தியருள வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள். இப்படி சித்ர குப்தன் தோன்றிய நாள் சித்ரா பௌர்ணமி.

அதே சமயம் தனியொரு நபராக கோடானுகோடி மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை பராமரித்து மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கின்றது தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று இந்திரனிடம் யமதர்மராஜன் முறையிட்டான். இருவரும் இறைவனை நாடி வந்தனர். ஈசனும் அவர்களின் கோரிக்கையை ஏற்று சித்ர குப்தனை காமதேனுவின் வயிற்றில் பிறக்கச் செய்தருளினார். காமதேனுவின் வயிற்றில் பிறந்த சித்ர குப்தனை இந்திராணி வளர்த்து ஆளாக்கினாள். இளமையில் சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். இறைவனும் ஏடும் எழுத்தாணியும் வழங்கி, சித்ரகுப்தனை யமனின் உதவியாளனாக நியமித்து உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதிப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

தக்க பருவம் அடைந்த சித்ரகுப்தனுக்கு மயனின் மகள்களான நீலாவதி, கர்ணவதி ஆகிய இருவரையும் மணமுடித்து வைத்து சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார். தன் மனைவியருடன் யமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இன்றும் இப்பொழுதும் கணக்கெடுத்து எழுதிக் கொண்டிருக்கிறார். இதன் அடிப்படையிலேயே சொர்க்கமா நரகமா என்பது தீர்மானிக்கப்படும். சித்ரா பௌர்ணமி அன்று சில ஊர்களில் ஆங்காங்கே பந்தல் அமைத்து இரவு நேரத்தில் பெரியோர்கள் சித்ரகுப்த நாயனார் கதையினைப் படிப்பார்கள். மக்கள் கூட்டமாக அமர்ந்து விடிய விடிய சித்ரகுப்தர் கதையைக் கேட்பார்கள். கதை சொல்லும் நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள், வந்தவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பணியாரம் என வழங்குவர்.

இவ்வாறு கதை சொல்வதும் கேட்பதும் மக்கள் கீழான எண்ணங்களில் இருந்து நீங்கி பாவம் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச் செயல்களில் ஈடுபட்டு மேல்நிலையினை அடையவேண்டும் என்பதற்காகவே! சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து பசும்பால், தயிர், நெய் இவற்றை விலக்கி விரதம் இருந்து வழிபட்டால் நல்லது. காலையில் விரதத்தை ஆரம்பித்து சித்ரகுப்தன் நினைவிலேயே இருக்க வேண்டும். மாலையில் நிலவு உதயமானதும் சித்ர குப்தனுக்குப் பூஜை செய்ய வேண்டும். மாக்கோலம் இட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து சர்க்கரைப் பொங்கலிட்டு பயற்றம்பருப்பும், எருமைப் பாலும் கலந்த பாயசத்தை நிவேத்தியம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். அதுவும் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு உதவியாக குறைந்த பட்சம் எழுது பொருட்களையாவது வழங்கலாம்.

சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு. உப்பு சேர்க்காமல் உணவு உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தன் மகிழ்ந்து நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும்போது புண்ணியத்தை அதிகப்படுத்தியும் பாவத்தைக் குறைத்தும் எழுதுவார். இதனால் மரணத்திற்குப் பின் நாம் நரக வேதனையிலிருந்து விலகி சொர்க்கத்தில் வாழலாம் என்று சிலர் சொல்வதுண்டு. சில ஆன்மீக இதழ்கள் கூட இவ்வாறு குறிப்பிடுகின்றன. நாம் தானமும் தவமும் செய்வது, நம் பாவவினைகள் குறைத்து எழுதப் படவேண்டும் என்பதற்காகவா!… அவ்வாறு சித்ரகுப்தன் எழுதினால், நம்பிக்கையுடன் பொறுப்பை ஒப்படைத்த ஈசனுக்குத் துரோகம் செய்தது போல் ஆகாதா?… அம்பிகையால் உருவாக்கப்பட்ட பெருமையை உடைய சித்ரகுப்தன் நம்பிக்கைத் துரோகம் செய்வாரா? உண்மையான இறையன்பர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்! நாம் செய்யும் தானமும் தவமும், நம்முடைய சிந்தையும் செயலும் மேன்மை அடைவதற்குத் தானே அல்லாமல் பாவப்பதிவுகளை மாற்றி எழுதுவதற்காக அல்ல என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்!..

சிந்தையும் செயலும் சீராகவே சித்ரகுப்த வழிபாடு!.

சித்ரசுகுப்தனுக்குரிய வழிபாட்டுப் பாடல்!

பாவ புண்ணயம் பதிந்து வைக்கின்ற
தேவ தேவனே! சித்ர குப்தனே!
ஆவல் கொண்டே அகத்தினில் நினைத்துப்
பூவைச் சூட்டிப் போற்றுகின் றேன்நான்!
எனது பாவத்தின் எண்ணிக்கை குறையவும்
தனது புண்ணியம் தழைத்து ஓங்கவும்
இன்று முதல்நீ இனியதோர் பாதையை
அமைத்துக் கொடுத்தே அருளினைக் காட்டுக!
உணவும் உடையும் உறைவிட மனைத்தும்
தினமும் கிடைக்க திருவருள் கூட்டுக!

சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்: ஒருவரின் பாப புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்து வந்தார் யமதர்மராஜன். அப்பொழுது கலி பிறந்தது. அதர்மங்கள் அதிகரித்தது. அதர்மங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால் யமதர்மராஜனால் பாப புண்ணிய கணக்குகளை தனியாக சரியாக நிர்வகிக்க முடியவில்லை. அவர் சிவபெருமானை அணுகி தனக்கு வேலை அதிகரித்துவிட்டதால் தனியாக செய்யமுடியவில்லை ஆகவே ஒரு உதவியாளர் தேவை என்று விண்ணப்பித்துக்கொண்டார். அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் பார்வதி இருக்கும் இடம் நோக்கி சென்றார் . சக்தி இல்லையேல் ஏது சிவம்?. அப்பொழுது பார்வதி தேவியார் தங்க தாம்பாளம் ஒன்றில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருந்தாள். அந்த உருவம் தனது கையில் ஒரு நோட்டு புத்தகத்தையும் எழுத்தாணியையும் வைத்திருந்தது. இதைப்பார்த்த சிவபெருமான் லோக மாதாவிடம் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பார்வதியும் தான் தங்க தாம்பாளத்தில் எழுதி வைத்திருந்த சித்திரத்தை பார்த்து வாயினால் ஊத அந்த உருவம் உயிர்பெற்றது. சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்து எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்க பணித்தார். அவரும் மனிதர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி அதன் ரகசியத்தையும் காத்து வந்தார்.

சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தை காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தன் ( குப்தன் என்றால் ரகசியத்தை காப்பவன் என்று பொருள்) என்ற பெயர் பெற்றார். இவ்வாறு உருவான சித்திரகுப்தன் பாப புண்ணிய கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது பூலோகத்தில் பலர் அறியாமல் செய்த பாபங்களின் கணக்கு மிக அதிகமாக இருந்தது. அறியாமல் செய்த பாபங்களுக்கு நாம் தண்டனை கொடுக்கிறோமே என்று விசனப்பட்டு அறியாமல் செய்த பாபங்களை பொறுத்து மக்களை காத்து ரஷிக்கவேண்டும் என்று பரமசிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவபெருமான் சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வேண்டுபவர்களுக்கு அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்கு அளிக்கும் சக்தியை சித்திரகுப்தனுக்கு அளித்தார். சித்திரகுப்தனும் ஜனங்களை அறியாமல் செய்த பாபங்களிலிருந்து காத்தருளிவருகிறார்.

சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி. சித்ரா பவுர்ணமியன்று தானங்கள் பல செய்யவேண்டும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் ஒன்று காஞ்சிபுரத்தில் இருக்கிறது. முடிந்தவர் நேரில் அந்த கோவிலுக்கு சென்றும் முடியாதவர் மனதளவிலும் வரும் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரகுப்தனை வணங்கி நாம் அறியாமல் செய்த பாபங்களிலிருந்து விமோசனம் பெறுவோம்.

சித்ரகுப்த த்யான ஸ்லோகம் :

சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகளீ பத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பர தாரம்
மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்.

சித்ரகுப்த காயத்ரி :

ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தன்னோ லோகஹ் ப்ரசோதயாத்.

மே 9: வெற்றிகள் அள்ளித் தரும் நரசிம்ம ஜெயந்தி.

Suriya Rice Amaravathi Celebrates Narasimha Avatar of Lord Vishnu on Narasimha Jayanthi

விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரம். ஏனெனில், ஒரு பக்தனின் சொல்லைக் காப்பாற்ற விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார். மனிதனுக்கு வாக்கு சுத்தம் மிக முக்கியம். ஒன்றைச் சொன்னால், அதைச் செய்தாக வேண்டும். வாக்கு தவறினால் அவனுக்கு மதிப்பு போய்விடும். தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற, தன் உயிரையும் கொடுத்ததால் தான், இன்றும் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார்.இதே போல, பிரகலாதனின் வார்த்தையைக் காப்பாற்ற கம்பத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார் நரசிம்மன். “அடேய் பிரகலாதா! எங்கேயடா இருக்கிறான் உன் விஷ்ணு? என்று கேட்கிறான் இரண்யன். “தந்தையே! அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான். ஏன்…எங்கும் வியாபித்திருக்கிறான். ஒவ்வொரு துகளிலும் அவன் உட்கார்ந்திருக்கிறான், என்றான் பிரகலாதன்.இதைக்கேட்ட விஷ்ணு பரபரப்பாகி விட்டார். “இந்தப் பொடியன், நாம் எங்கிருக்கிறோம் என கையைக் காட்டுவானோ! அங்கிருந்து உடனே வெளிப்பட்டாக வேண்டுமே! எனவே, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து காத்துக் கிடந்தான்.

பிரகலாதன் தூணைக் கை காட்ட, இரணியன் அதை உடைத்தான். மனித உடலும், சிம்ம முகமும் கொண்டு நரசிம்மனாய் அவன் வெளிப்பட்டான். ‘நரன் என்றால் ‘மனிதன். ‘சிம்மம் என்றால் ‘சிங்கம். இதனால் தான் அவனை ‘நரசிம்மன் என்றும், ‘நரசிங்கன் என்றும் சொல்வார்கள். மதுரை அருகே அவன் கோயில் கொண்டுள்ள ஊருக்கே ‘நரசிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.தூணிலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருணைக்கடல், இரணிய வதத்தை முடித்த பிறகு, பிரகலாதனிடம், “நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்றான். “ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என்ற பிரகலாதனிடம், தூண் என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே! என்றானாம்.ஆம்.. நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும். லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் 108 தடவைசொல்லி வழிபடுவோர் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நவ நரசிம்மமூர்த்திகள்

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடா காரஸ் ச பார்கவ
யோகா நந்தஸ் சத்ரவடு: பாவனோ நவமூர்த்தய:

பகவான் நரசிம்மராக ஆவிர்பவித்து ஒன்பதுவித வடிவங்களில் நவ நரசிம்மர்களாக அஹோபில க்ஷேத்திரத்தில் காட்சி தருகிறார். அந்த நவரூபங்களைத் தியானிப்போம். ஜ்வாலா நரசிம்மர்: எங்கிருக்கிறான் உன் நாராயணன் என்ற ஹிரண்யகசிபுவின் அறைகூவலுக்குப் பதிலாக, பிரகலாதன், தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்! என்றவுடன், கோபத்தின் உச்சியில் அவன் தன் கதையினால் தனது ஆயிரம் தூண்கள் கொண்ட அரண்மனையில் ஒரு தூணைத் தாக்க, அதே நொடியில் சிம்ம முகமும், மனித உடலும், வஜ்ரநகங்களும் கொண்டு தோன்றிய கோலம். அஹோபில நரசிம்மர்: கருடன் செய்த கடும் தவத்திற்கு மெச்சி, ஹிரண்யகசிபுவைத் தனது மடியில் போட்டு வதை செய்யும் கோலத்தில், சக்தி ஸ்வரூபனாக, மலைக் குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு ஸ்வயம்புவாகத் தோன்றிய மூர்த்தி.

மாலோல நரசிம்மர்: மா என்றால் திருமகள். லோலா என்றால் காதல். லக்ஷ்மிமேல் காதல் கொண்டவர். மகாலக்ஷ்மி தாயாருடன் ஸ்ரீய: பதியாய் லக்ஷ்மி நரசிம்மராகச் சேவை சாதிக்கும் பெருமாள். தாயாரும் பெருமாளின் இடத்தொடையில் ஆலிங்கன கோலத்தில் அமர்ந்து ஆனந்தமாகச் சேவை சாதிக்கிறார்.

க்ரோடா நரசிம்மர்: க்ரோடா என்றால் கோரைப்பல். கோர வராகமாகத் தோன்றி, ஹிரண்யகசிபுவின் சகோதரன் ஹிரண்யாக்ஷன் பாதாளத்தில் ஒளித்து வைத்த மண்மகளான தனது பிராட்டியாரைக் கோரைப் பற்களில் ஏந்தி வந்து அவருக்கு சரம
ஸ்லோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை சாதிக்கும் மூர்த்தி.

காரஞ்ச நரசிம்மர்: காரஞ்ச என்றால் தெலுங்கில் புங்க மரம் என்று பொருள். அனுமன் செய்த தவத்திற்கு மெச்சி ராமராகச் சேவை சாதிக்க, வனத்தில் சுயம்புவாகத் தோன்றியவர். விஷ்ணுவாக அல்ல ராமனாகவே தரிசிக்க விரும்புகிறேன் என்று அனுமன் வேண்ட, வில், அம்பு தாங்கி நரசிம்மர் ராமனாகவும், ஆதிசேஷன் குடைபிடிக்க வைகுண்ட நாதனாகவும் சேவை சாதிக்கிறார்.

பார்கவ நரசிம்மர்: பார்கவர் என்ற முனிவர், திருமகள் தன் குழந்தையாக வரவேண்டும் என்று தவம் செய்து ஸ்ரீயை மகளாகப் பெற்றவர். இவர் பெருமாளை நரசிம்மமூர்த்தியாகத் தரிசிக்க வேண்டுமென்று தவம் செய்ய, ஹிரண்யகசிபுவைத் தன் மடியில் வைத்து குடலை மாலையாகப் போடும் உக்ர நரசிம்மராக அருகில் கைகூப்பி பெருமாளின் கருணையை வியந்த வண்ணம் பிரகலாதன் நிற்க. சேவை சாதிக்கும் மூர்த்தி.

யோகானந்த நரசிம்மர்: பிரகலாதனுக்கு குருவாக அமர்ந்து யோக நெறியைக் கற்பித்த நரசிம்மர். ஆதிசேஷன் மேல் கால்களை மடக்கி யோககோலத்தில் யோக முத்திரையில் சேவை சாதிக்கும் பெருமான்.

சத்ரவட நரசிம்மர்: சத்ரம் என்றால் குடை. வடம் என்றால் ஆலமரம். ஒரு பெரிய ஆலமரத்தின் மடியில் ஆனந்தமாக பத்மாசனத்தில் அமர்ந்து, ஹாஹா ஹூஹூ என்னும் இது கந்தவர்களின் இனிமையான சங்கீதத்தைச் செவிமடுத்தப்படித் தாளம்போடும் கோலத்தில் சாந்த நரசிம்மராக சேவை சாதிக்கும் பெருமாள்.

பாவன நரசிம்மர்: நம்முடைய வினைகளைத் தீர்த்து இந்த பவசாகரச் சுழலிலிருந்து நம்மைக் கரையேற்றி, இப்பிறவிப் பிணியிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவர். முருகன் வேடர் குலப் பெண் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டது போல செஞ்சு இனத்தில் பிறந்த பெண்ணை திருக்கல்யாணம் செய்து கொண்டு செஞ்சுலக்ஷ்மி தாயாருடன் காட்சி தரும் நரசிம்மர்.

பிரகலாதன் சொன்ன சொல்லை நிரூபிப்பதற்காக மகாவிஷ்ணு உடனே எடுத்தது நரசிம்ம அவதாரம். அத்தகைய சிறந்த பக்தனான பிரகலாதன் முற்பிறவியில் கயவனாக – கள்வனாக – மக்களுக்கு துன்பங்கள் இழைத்த மகாபாவியாக வாழ்ந்து வந்தான். அப்பொழுது அவன் பெயர் சுவேதன். அவன் தன் இறுதிக் காலத்தில் தவறுகளை எண்ணி வருந்தி, தன்னை மன்னித்தருளுமாறு மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தான். தனக்கு எந்த வடிவிலாவது காட்சி தந்து அருளுமாறு வேண்டினான். ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்துக்கொண்டேயிருந்தான். அப்போது ஓர் அசரீரி வாக்கு, இந்தப் பிறவியில் நீ என்னை தரிசிக்க இயலாது; உன் அடுத்த பிறவியில் நீ அழைத்ததும் வருவேன் என்று ஒலித்தது. குரல் வந்த திசை நோக்கி கைகூப்பியவண்ணம் உயிர்விட்டான் சுவேதன்.

இந்த சுவேதன்தான் அடுத்த பிறவியில் இரணியனுக்கு மகனாகப் பிறந்தான். யார் இந்த இரணியன்? வைகுண்டத்தில் துவாரபாலகர்களாக ஜயனும் விஜயனும் சேவகம் செய்தார்கள். இருவரும் ஒரே உருவ அமைப்பு கொண்டவர்கள். வைகுண்டத்தில் ஏழு வாசல்கள் உண்டு. ஏழாவது வாசலைக் கடந்தால்தான் உள்ளே அரியாசனம் ஹரியான மகாவிஷ்ணுவின் ஆசனம். அந்த வாயிலின் இரு பக்கத்திலும் ஜயனும் விஜயனும் துவாரபாலகர்களாக இருக்கும்போது, சனகாதி முனிவர்கள் இளம் பாலகர்கள் வடிவத்தில் அங்கு வந்தார்கள். அந்த முனிவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஜயனும் விஜயனும் தடுத்தனர். அதனால் கோபம்கொண்ட முனிவர்கள், காமம், குரோதம், லோபம் என்ற மூன்று சத்ருக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூலோகத்தில் பன்னிரண்டு பிறவிகள் எடுக்கக் கடவீர்கள் என்று சபித்தனர். இதையறிந்த மகாவிஷ்ணு அங்கே வந்தார். முனிவர்கள், மகாவிஷ்ணுவை வணங்கி நடந்ததைக் கூறினர்.

முனிவர்களின் சாபத்தை ஜயனும் விஜயனும் அனுபவித்தே ஆகவேண்டும். இருந்தாலும் அவ்விருவரும் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கவே, அவர்களுக்கு இரங்கிய பகவான், துவாரபாலகர்களே, என்னைப் போற்றி வழிபட்டு பன்னிரண்டு பிறவிகள் பூலோகத்தில் வாழ்ந்து அதன்பின் வைகுண்டம் திரும்பிவர விருப்பமா? அல்லது பூலோகத்தில் மூன்று பிறவிகள் எடுத்து என்னை நிந்தித்து வைகுண்டம் திரும்பிவர விருப்பமா? என்று கேட்டார். பகவானே தங்களைப் பிரிந்து பூலோகத்தில் பன்னிரண்டு பிறவிகள் இருக்கமுடியாது. உங்களை நிந்தனை செய்தாலும் பரவாயில்லை; மூன்று பிறவிகள் போதும். தங்கள் திருக்கரங்களால் வதமாகி வைகுண்டம் வரவிரும்புகிறோம் என்றனர். மகா விஷ்ணுவும் அருளினார்.

இந்த நிலையில் பூவுலகில் பிரஜாதிபதி என்னும் முனிவர் மாலை நேர பூஜை செய்துகொண்டிருந்தார். அச்சமயம் அவரது மனைவி திதி அவரைக் கட்டித் தழுவினாள். அதன்விளைவால் அவர்களுக்கு இரண்டு அசுர குணம்கொண்ட மக்கள் பிறந்தார்கள். அவர்களே இரண்யாட்சன், இரண்ய கசிபு என்ற இரணியன். பிறக்கும்போதே அவர்கள் கரிய நிறமும் முரட்டு குணம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் வளரவளர தேவர்கள் அஞ்சினர். இந்த இருவரும் கடுந்தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றார்கள். ஒரு சமயம் இரண்யாட்சன், மகாவிஷ்ணுவுக்கு எவ்வளவு பலம் உள்ளதென்று அறிய வைகுண்டம் சென்றான். அங்கே அவர் இல்லை. தேடிப் பார்த்தான். அப்போது பூமி உருண்டையாக இருப்பதைக் கண்டான். அதைத் தூக்கிச்சென்று பாதாள உலகில் ஒளித்து வைத்தான். பூமாதேவி, பகவானே காப்பாற்று என்று அபயக்குரல் கொடுத்தாள்.

உடனே மகாவிஷ்ணு பூமி எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, வராக (பன்றி) அவதாரம் எடுத்து பாதாளம் சென்று, இரண்யாட்சனைக் கொன்றுவிட்டு, பூமியை தன் கொம்பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். (மகாவிஷ்ணு வராகராய் காட்சி தந்ததைக் கண்ட பூமாதேவி, அவரை ஆரத்தழுவினாள். அதனால் மகிழ்ந்த ஸ்ரீவராகர் அவளைத் தானும் தழுவினார். இப்படி அவர்கள் ஆலிங்கனம் செய்து கொண்ட காலம் தேவ வருஷம் என்கிறது புராணம். அதன்விளைவாக ஒரு மகன் பிறந்தான். அவன்தான் நரகாசுரன்.) இரண்யாட்சன் வதம் செய்யப்பட்டதை அறிந்து இரணியன் மகாவிஷ்ணுமீது கடுங்கோபம் கொண்டான். அவரை அழிக்க எண்ணிய அவன், அதற்கான வலிமைபெற தவம் செய்வதற்காக மந்தாரமலையின் குகையினுள் நுழைந்து அமர்ந்தான். அப்போது, அவன் மனைவி லீலாவதி கர்ப்பவதியாக இருந்தாள்.

இதுதான் தக்கசமயமென்று நராத முனிவர் இரணியனின் அரண்மனைக்கு வந்தார். அப்போது லீலாவதி மஞ்சத்தில் படுத்து நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள். உடனே நாரதர் கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீமன் நாராயணன் தான் ஈரேழு உலகத்திற்கும் அதிபதி என்று உபதேசித்ததுடன், ஓம் நமோ நாராயணாய என்ற மகாவிஷ்ணுவின் மூல மந்திரத்தையும் உபதேசித்தார். தாயின் கர்ப்பத்திலிருந்த குழந்தை நாரதரின் உபதேசத்தை உன்னிப்பாகக் கேட்டதுடன், அப்பொழுதே ஓம் நமோ நாராயணாய என்று முணுமுணுக்க ஆரம்பித்தது. இரணியனின் மனைவி லீலாவதி பிரசவித்தாள். ஓர் அழகிய தெய்வாம்சம் நிறைந்த குழந்தை சுபநாளில் பிறந்தது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன். தவம் செய்து பல வரங்கள் பெற்ற இரணியன், அனைவரும் தன்னைத்தான் வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டான். அவன் கட்டளைக்கு அடிபணியாதவரை பாதாளச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான். வருடங்கள் கடந்தன. பிரகலாதன் அசுர குலத்தில் பிறந்தாலும் ஓம் நமோ நாராயணாய என்று எட்டெழுத்து மந்திரத்தை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருந்தான். இதனைக்கண்ட இரணியன், அந்தப் பெயரை உச்சரிக்காதே. இந்த உலகங்கள் அனைத்திற்கும் நானே அதிபதி. என் பெயரைச் சொல். இரண்யாய நமஹ என்று சொல் என்று கட்டாயப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ மகா விஷ்ணுவே தெய்வம் என்பதில் உறுதியாக இருந்தான். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் அவன் அஞ்சவில்லை. வெறுத்துப்போன இரணியன் தன் தங்கை ஹோலிகாவை அழைத்து, இவனை நெருப்பு வளையத்திற்குள் அழைத்துச் சென்று பஸ்பமாக்கிவிடு என்று உத்தரவிட்டான்.

இந்த ஹோலிகா நெருப்பால் பாதிக்கப்படாத வரம்பெற்றவள். அவள் அண்ணன் சொல்படி பயங்கரமாக எரிந்துகொண்டிருந்த நெருப்பு வளையத்திற்குள் பிரகலாதனை அழைத்துச்சென்றாள். அப்போதும் பிரகலாதன் கைகளைக் கூப்பிக்கொண்டு ஓம் நமோ நாராயணாய என்று ஜெபித்துக் கொண்டே சென்றான். ஆனால், தீய எண்ணத்துடன் நெருப்பு வளையத்திற்குள் நுழைந்த ஹோலிகா பஸ்பமானாள். நாராயணன் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டே சென்ற பிரகலாதன் பொலிவுடன் வெளிவந்தான். இரணியனின் கோபம் எல்லை கடந்தது. அவன் பிரகலாதனிடம், உன் நாராயணன் எங்கே உளான்? அவனைக் காட்டு என்று கையில் வைத்திருந்த கதையைச் சுழற்றினான். ஸ்ரீமன் நாராயணன் தூணிலும் உளான்; துரும்பிலும் உளான் என்றதும், அருகிலிருந்த தூணில் பலம்கொண்டு தன்கதையால் தாக்கினான். அந்த வேளை பிரதோஷ காலமாகும். பகல்பொழுது மறையும் காலம். இரவும் பகலும் இல்லாத வேளை. நரசிம்மர் அந்தத் தூணிலிருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற வரத்தினை அறிந்த நரசிம்மர் அந்தப் பிரதோஷ வேளையில் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் ஆகாயத்திலும் பூமியிலும் இல்லாமல் தம் மடியின்மீது படுக்கவைத்து, ஆயுதத்தால் கொல்லாமல் தன் கூர்மையான கைகளின் நகங்களால், அவன் மார்பினைப் பிளந்து, குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டு இரணியனை சம்ஹாரம் செய்தார். இந்தக் காட்சியைக் கண்ட பிரகலாதன், தன் எதிரே சிங்கமுகத்துடனும் மனித உடலுடனும் காட்சிதந்த நரசிம்மமூர்த்தியை கைகூப்பி வணங்கினான். அப்போது தன் முற்பிறவி நினைவுக்கு வந்தது.

பகவானே, கடந்த பிறவியில் நான் வேண்டிக்கொண்டதன் பயனால் இப்பிறவியில் எனக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து அருள்புரிந்தீர் என்று தாள்பணிந்தான் பிரகலாதன். மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார். அவற்றுள் சில: பெரும்பாலும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிதரும் நரசிம்மர், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன் மேடு என்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். சேலம் மாவட்டம், நாமக்கல் குடைவரைக் கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். இரணியன் வயிற்றைப் பிளந்த கைகள் என்பதற்கேற்ப சிவப்பு நீரோட்டத்துடனும் நகங்கள் ரத்தக்கறைச் சிவப்புடனும் உள்ளதை தரிசிக்கலாம்.